Sunday, May 15, 2022

What is Cloud Computing ? - மேகக் கணிமை என்றால் என்ன ? - PART-3 [History II - வரலாறு II ]

 

நாம் இதுவரை மேகக் கணிமையின் முன்னோட்டத்தையும், அதன் வரலாற்றில் சிறிய பகுதியையும் பார்த்தோம்... இனிவரும் பகுதிகளில், அதன் அடிப்படை கட்டமைப்பு, சிறப்பியல்புகள் – Characteristics, வகைகள், நன்மை தீமைகள், போன்ற மற்ற பதிவுகளையும் பார்போம்....
 
இன்றைய மேகக் கணிப்பு எப்படி உருவானது என்பதை இன்று தெரிந்து கொள்ளலாமா?
 
கணினி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அவை தனித்தே செயல்பட்டு வந்தன. அதன் பயன்பாடுகள் பற்றிய ஆய்வு அதிகமாக அதிகமாக, கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் தன்மை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணினிகள் பல்வேறு விதங்களில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தன.
முதன்முதலில் பயனர்-சேவையர் முறை உருவானது. இதில் பயன்பாடும், சேமிப்புக்கலன், நினைவகம் முக்கிய அங்கம் வகித்தன.
அனைத்து மென்பொருளும், தரவுகளும், கட்டுப்பாடுகளும் பெரிய கணினி சேவையகத்தில் இருந்தன. பயனர்கள் வேண்டியத் தரவுகளைப் பெறவும் மென்பொருட்களைச் செயல்படுத்தவும் முக்கியக் கணினியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு நுகர்வி (கிளையன்ட்) கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இது முக்கிய கணினியுடன் தொடர்பு கொள்ளும் ஒரே பணியை மட்டுமே செய்தன. தனித்து இயங்காது. பயனர்கள் எப்போதும் முக்கிய கணினியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இவை பயனர்களை முன்னிறுத்திச் செயல்படாதவை. ஆனால் மேகக் கணிப்பு, பயனர்களை மையமாகக் கொண்டது.


சேவையகம் எப்படி இருந்தாலும், நுகர்வி அதன் மூலமாகவே செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம் பயனர்-நுகர்வியில் இருந்தது.
இரண்டு சக்தி வாய்ந்த கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படுவது அடுத்த நிலை. ஒரு கணினி பயனராகவும் மற்றொன்று நுகர்வியாகவும் செயல்படும் வாய்ப்பு இருந்தது. இதில் மையப்படுத்துதல் மாற்றம் பெற்றது. கட்டுப்பாடு பகிர்ந்தளிக்கப்பட்டது. எத்தனை கணினிகள் இருந்தாலும் அனைத்துமே தனித்தும் பயன்படுத்தலாம். ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு வளங்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் அமைந்தன. இது நேரடித் தொடர்பு (பியர் டு பியர் – பி2பி [Peer To Peer - P2P]) அமைப்பு என்று அழைக்கப்பட்டது.
 
1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூஸ்நெட் (Usenet) இந்த வகையில் அமைக்கப்பட்ட ஆரம்ப கால இணையம். இதில் ஒவ்வொரு கணினியும் வலையாக இணைக்கப்பட்டன. அனைத்து கணினிகளும் இணையத்தின் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டன. தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்த யூஸ்நெட் சேவையர் இணையத்தில் புதிதாகச் சேர்க்கப்படும் கணினி, உடனே இந்த இணையத்தின் அனைத்துத் தகவல்களையும் பெறும் தன்மை பெற்றது. பயனர் சேவையர் முறையில் கணினி இணைக்கப்பட்டாலும், இது நேரடித் தொடர்பு ஏற்படுத்தி, இன்றைய மேகக் கணிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.


அடுத்து விநியோகக் கணிப்பு (டிஸ்டிரிபியூட்டட் கம்பியூட்டிங் - Distributed Computing) முறை வந்தது. இது அதிக கணிப்பு சக்தி கொண்டது. இதுவும் பி2பி முறையின் ஒரு வகை. ஆனால் இதில் இணைக்கப்படும் கணினிகள் தொடர்பு கொள்வதோடு நின்றுவிடாமல், செயலற்ற கணினி மற்ற கணினிகளுக்குத் தேவையான சக்தியைத் தரும் வகையில் இருந்தது. அதற்குத் தேவையான செயல்களைச் செய்து தந்தது. அதனால் விநியோகக் கணிப்பு முறையில் இணைக்கப்பட்ட 100 கணினிகள், உலகில் பெரிய கணினிகளையும், மகாகணினிகளையும் விட கூடுதல் சக்தி படைத்ததாக ஆயின.
1973ஆம் ஆண்டு ஜெராக்ஸ் பார்க் (Xerox PARC - Palo Alto Research Center) கண்ட இந்த முறை, இணையகத்தில் செயலற்ற கணினிகளுக்கும் வேலை தந்தன. 1988இல் டெக் கண்ட விநியோகக் கணிப்பு பெரிய எண்களுக்குக் காரணிகளைக் (பேக்டர்) கணித்தது. 1990இல் 100 பயனர்களை கொண்ட கணினிக் குழு 100 இலக்க எண்களுக்குக் காரணிகளைக் கணித்தது. 1995இல் வலையாக அமைக்கப்பட்ட கணினிக் குழு 130 இலக்க எண்ணுக்கு காரணிகளைக் கணித்தது. அத்தனை சக்தியை வலையகக் கணினிகள் தந்தன.
 
ஆரம்ப காலத்திலிருந்தே, பல பயனர்கள் ஒரே செயலை, பல கூறுகளாகப் பிரித்துக் கொண்டு, செயல்பட்ட போதும், இணைந்து செயல்படும் திறன் தேவைப்பட்டது. குழுவாக இணைந்து செயல்படும் இதுவே மேகக் கணிப்பிற்கு முன்னோடியானது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூற்றுக்கு பல்வேறு கதைகளை பலரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதற்கான மிகப் பெரிய உதாரணம் மேகக் கணிப்பு என்று சொன்னால், இன்று யாராலும் மறுக்க முடியாது.

பல வகையான பி2பி இணைந்து இத்தகைய குழு வேலைகள் செயல்பட்டு வந்தன. இம்முறையில் செயல்பட ஒருவர் மற்றொருவருக்கு உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வசதி தேவைப்பட்டது. அதுவே மின்னஞ்சல், ஆடியோ வீடியோ தொலைபேசி எல்லாம். பின்னர் அதே போன்று கோப்புகளையும் தரவுகளையும் அனுப்பும் முறைகள் தேவைப்பட்டன. இவையும் கணினி தொடர்பால் சாத்தியமானது. லோட்டஸ் நோட்ஸ், மைக்ரோசாப்ட் நெட்வொர்க் இதைச் சாத்தியமாக்கியது.
 
ஒரே நிறுவனத்தினர் தொடர்பு கொள்வது பின்னர், பல நிறுவனத்தினருடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு முன்னேறியது. ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பல இடங்களில் இருக்கும் பயனர்கள் பயன்படுத்துவதற்கு மேலாக, பல நிறுவனத்தினரும் இணைந்து செயலாற்றும் திறம் இணையத்தால் சாத்தியமானது. இதற்கு எடுத்துக்கொண்ட திட்டத்தைச் (பிராஜெக்ட்) சார்ந்த அனைத்துக் கோப்புகளும், ஆவணங்களும், தரவுகளும் மேகத்தில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவற்றை இணையத் தொடர்பு இருக்கும் எந்த இடத்திலிருந்தும் அணுகும் திறன் கிடைத்தது.
 
இத்தகைய மேகம் சார்ந்த ஆவணஙகள் முதன்முதலில் கூகுள் நிறுவனத்தார் உருவாக்கிய பெரிய சேவையத்தின் மூலம் கருவானது. இன்று அது வளர்ந்து மற்ற பெரிய நிறுவனத்தினரும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பயன்பாட்டு நிரல்கள் மூலமாக சிறகை விரித்து உலகமெங்கும் பறந்து கொண்டு இருக்கிறது.
இன்று மேகச் சேவையை பயனர்கள் பலரும் தங்கள் கோப்புளை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும், தேடி எடுத்து பயன்படுத்தவும் உசிதமான தளமாக மேகக் கணிப்பு உருவாகி இருக்கிறது.

மேகத்தின் கட்டமைப்பு என்ன?
 
மேகம் என்பது எப்போதும் கூறி வருவது போல பல கணினிகளும் சேவையகங்களும் இணையத்தால் இணைக்கப்பட்ட கணினி கூட்டம். அதற்கு வன்பொருளை தனி நபரோ நிறுவனமோ அமைத்து, பல தரவு மையங்களைக் கொண்டதாக அமைப்பர். கணினிகள் எந்த இயக்கு தளத்தையும் பெற்றிருக்கலாம்.
தனி நபர்கள் மேகத்தை தங்கள் மேசை கணினி மூலமாகவோ அல்லது மடிக்கணினி மூலமாகவோ எந்தவொரு போர்ட்டபில் சாதனம் மூலமாகவோ இணையத்துடன் தொடர்பு தொடர்பு கொள்ளலாம். பயனர்களால் மேகம் ஒரேயொரு தனி பயன்பாடாகவும் சாதனமாகவும் ஆவணமாகவும் கருதப்படும். வன்பொருள் பயனர்கள் கண்களுக்கு புலப்படாது.
 
இந்தக் கட்டமைப்பு மிகவும் எளிதாகத் தோன்றிய போதும், இதன் பணிகளை நிர்வாகம் செய்வதில் தான் அதன் முக்கியம்சம் அடக்கியுள்ளது. கணினியில் இட்டப் பணியினை ஏற்று, அதை கணக்கற்ற பல கணினிகளின் துணை கொண்டு செயலாற்றி, இறுதியில் முடிவுகளைத் தருவதில் தான் மேகத்தின் சாதுர்யம் இருக்கிறது.

Working principles of Cloud Computing
 
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், முதலில் தனி நபர் ஒருவர் கணினி மூலம் இணைய முகப்பைக் கொண்டு மேகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். இங்கு தான் பயனர் தனக்கு வேண்டிய பயன்பாட்டையோ ஆவணத்தையோ திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். பயனரின் பணி பிறகு அமைப்பு நிர்வாக (சிஸ்டம் மேனேஜ்மென்ட்) நிரலுக்கு மாற்றப்படும். அது சரியான வளத்தைக் கண்டுபிடித்து பிறகு ஒதுக்கீட்டுச் சேவையை (பிரொவிசனிங் சர்விசஸ்) செயல்படுத்தும். இந்தச் சேவை தான் மேகத்திலுள்ள தேவையான வளத்தைக் கண்டுபிடித்து, இணையப் பயன்பாட்டைச் செயலாற்றச் செய்து, வேண்டிய ஆவணங்களை உருவாக்கவோ திறக்கவோ உதவும். இணைய பயன்பாடு செயவாற்றத் துவங்கியதும், அமைப்பு கண்காணிப்பும் (சிஸ்டம் மானிடரிங்) அளத்தலும் (மீட்டரிங்) ஆரம்பமாகிவிடும். சரியான வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையறியவும் இவை உதவும்.
மேகத்தின் இந்த முக்கியமான நிர்வாகப் பணி, மனித கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், முழுக்க முழுக்க சேவையகங்களால் செய்யப்பட வேண்டியது என்பதைப் புரிந்து கொள்ளுதல் இங்கு அவசியம்.
 
அப்படியென்றால் மேகச் சேமிப்புக்கலன் எப்படி இருக்கும்?
மேகக் கணிப்பின் மற்றொரு அம்சம் மேகச் சேமிப்புக்கலன் தான். இதில் தரசுகள் தரவு மையங்களிலும் தனி நபர் கணினிகளிலும் சேமிக்கப்படாமல், மாற்றார் (3rd பார்ட்டி) அமைத்திருக்கும் சேவையகக் கூட்டத்தின் பற்பல கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.
 
தரவு சேமிக்கப்படும் போது, பயனருக்கு மறைமுகமான சேவையகம் தென்படும். தரவு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்படுவது போல் தோன்றும். ஆனால் உண்மையான இடமாக இருக்காது. அது எங்கு சேமிக்கப்படுகிறது என்பதைப் பயனரால் அறிந்து கொள்ள முடியாது. பயனரின் தரவு மேகக் கூட்டத்தின் எந்தக் கணினியில் வேண்டுமானாலும் இருக்கலாம். நாளுக்கு நாள், நொடிக்கு நொடி அது மாறவும் கூடும். மேகம் அதை கிடைக்கும் வளத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டே இருக்கும் வல்லமை கொண்டது.
 
இடம் மறைமுகமாக இருந்த போதும், மேகம் கணினியில் பயனருக்கு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட ஆவணம் இருக்கும் வகையில் காட்சி தரும்.
இன்று இருக்கும் மேகச் சேவைகள் என்னென்ன?
இணையம் மூலமாக பயன்பாடுகளும் சேவைகளும் மேகம் மூலமாகத் தரப்படுவதே மேகச் சேவை. இவை கால அட்டவணை, எழுத்துச் செயல்பாட்டுகள், ஸ்பிரெட் ஷீட் ஆக இருக்கலாம். கூகுள் முதற்கொண்டு அமேசான், மைக்ரோசாப்ட் என்று பல நிறுவனங்கள் பல மேகப் பயன்பாடுகளை (அப்பிளிகேஷன்ஸ்) உருவாக்கி வருகின்றனர்.

பயன்பாடு மேகத்திலேயே நிறுவப்படுகிறது. தனி நபர் அதை மேகத்திலேயே செயல்படுத்தியும் கொள்ளலாம். இந்தப் பயன்பாடுகளில் சில இலவசமாகத் தரப்படுகின்றன. சில பயன்பாடுகளுக்கு பயன்பாட்டிற்கு ஏற்ப தொகை கட்ட வேண்டி வரும். அதையும் இணையத்தின் மூலமாக கட்டி விடலாம். பயன்பாடும் பயன்படுத்தப்படும் ஆவணங்களும் மேகச் சேவையகத்திலேயே வைக்கப்படும்.
இதனால் பல பயன்கள் உண்டு. ஆவணங்களை நகல் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்தக் கணினி மூலமாகவும் இணைய வழி ஆவணங்களைப் பெறலாம். கணினி செயலிழந்து போனால், மற்றொரு கணினி கொண்டு இதே வேலையைத் தொடரலாம். ஒரே ஆவணத்தை அனுமதி பெற்ற பல பயனர்கள் ஒரே நேரத்தில் காணலாம்.
 
மேகக் கணிப்பு உருவான விதத்தையும், அது செயல்படும் விதத்தையும் மேலோட்டமாக அறிந்து கொண்டோம்.


தொடரும் (3)......! 🙂


Cloud Computing - மேகக் கணிமை - PART-1

 

What is Cloud Computing ? - மேகக் கணிமை என்றால் என்ன ? - PART-1 [An Overview - ஒரு முன்னோட்டம்]
 
நீங்கள் மேகக் கணிமை (Cloud Computing) பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றால் கவலைவேண்டாம்... உலகில் உள்ள 95 சதவிகித மக்கள், மேகக் கணிமை என்றால் என்னவென்றே தெரியாமல் இந்த தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர்.. 
 
ஆச்சர்யமாக இருகிறதா ?? தொடர்ந்து முழுவதுமாக படியுங்கள் !!
தற்பொழுது கம்ப்யூட்டர் உலகின் புதுப் போக்கு (Latest Trend), மேகக் கணிமை (Cloud Computing) எனப்படும் கணிமைத் திறன் அனைத்தையும் (Computing facilities [e.g. Platform, Infrastructure, and Software Services]) இணையம் (Internet) ஊடாக பெறத்தக்கதான ஒரு தொழில்நுட்ப வசதி ஆகும்.
 
ஒரு நிறுவனம், கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை (Hardware and Software Infrastructure) அமைப்பதின் நேரம், பணம் உள்ளிட்ட மூலதனச் செலவை தவிர்த்து, கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து, பயன்பாட்டுக் கட்டண (Usage Fee) முறையில் தனது தேவைக்கேற்ற அளவு, கணிமைத் திறன்களை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பெற்று பயன்படுத்தலாம்.
 
உதாரணமாக ஒவ்வொருவரும் தனக்கு தேவையான நீரைபெற்றுக்கொள்ள கிணறுதோன்றி, மோட்டார் வாங்கி, தனி அறை அமைத்து, அதை பராமரிக்க ஆள் வைக்க செலவளிப்பதை விட மிக இலகுவான முறையில் அரசாங்க குழாய் அமைப்பூடாக (Pipe Line) பயனீட்டு அலகு (Usage Unit) முறையில் நீரை பெற்றுக் கொள்வது போல், தனக்கோ தன் நிறுவனத்திற்கோ தேவையான கணிமத் திறனை, அதற்கான வாடகை செலுத்தி, இணையம் ஊடாக பெற்று பயன்படுத்திகொள்ளும் வழிமுறை தான் இந்த Cloud Computing.
Vmware, Sun Microsystems, Rackspace US, IBM, Amazon, Google, BMC, Microsoft, Google மற்றும் Yahoo ஆகியவை பிரதான மேகக் கணிமை சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகும்.
 
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் தற்போது இந்த Cloud Computing முறையில் இயங்குபவை தான்...
ஆப்பிரிக்காவில் இருக்கும் மகள், தமிழகத்தில் இருக்கும் தன் தந்தையிடம் பேசும் உரையாடல்:
“அப்பா.. இன்னிக்கு குழந்தையோட பிறந்த நாள் விழா நல்லா நடந்தது”
“நிறைய படங்கள் எடுத்தீங்களா!”
“எடுக்காமலா? அதை இப்பத்தான் பேஸ்புக்கில ஏத்தினேன்”
“அப்ப.. இப்பவே படங்கள பார்த்துடறோம்..”
சில நிமிடங்களுக்குப் பின், மறுபடியும் கால்.
“அப்பா.. படங்களப் பாத்தீங்களா?”
“நானும் அம்மாவும் பார்த்தோம். என்ன தான் வெப் கேம் மூலமா நடந்ததெல்லாத்தையும் பார்த்தாலும், போட்டோவுலே அதைப் பார்க்கறதுங்கறது தனிதான்.. வீடியோவை ஏன் இன்னும் ஏத்தல?”
“இதோ.. இன்னும் அரைமணி நேரத்துல அதுவும் இணையத்துல இருக்கும்..”
“அப்ப சரி.. நான் ரஷ்யாவுல இருக்கும் உன் அண்ணனை பார்க்கச் சொல்லிடறேன்…”
இப்படி ஆப்பிரிக்காவில் நடந்த பிறந்த நாள் நிகழ்வின் படங்களை, இந்தியாவிலும் இன்னும் உலகின் மற்ற நாடுகளிலும் உடனுக்குடன் பார்க்கும் திறன் இன்று கணினி உலகின் மாபெரும் முன்னேற்றத்தின் ஒரு சிறு அங்கமே என்று கூறும் வகையில், கணினி உலகில் பன்மடங்கு முன்னேற்றம் நாளுக்கு நாள் ஏற்பட்டு வருகிறது.
பேனாவிற்குப் பதிலாக சட்டைப் பையில் கைபேசி, புத்தகத்திற்கு பதிலாக ஐ-பேட் என்று மனிதன் பயன்படுத்தும் பொருட்கள் மாறி வருகின்றன. எழுதுவதற்கு பதிலாக, எழுத்துக்களை தட்டுவது என்று பயன்பாடும் மாறிவிட்டது. கணினியில் தட்டுவது சுலபமாகிப் போனதால், பரீட்சையை எழுத வேண்டுமா என்று ஆயாசப்படுகின்றனர் இன்றைய மாணவர்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டி சரி செய்வதால், மைக்ரோசாப்ட் வேர்ட்டில் கட்டுரைகளை அடிப்பது அவர்களுக்கு சுலபம். மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.
ஏகப்பட்ட துகள்கள் ஒன்று சேர்ந்து தூசாகிறது. அந்தத் தூசுகள் ஒன்று சேர்ந்து மேகமாகின்றன. அந்த மேகங்கள் வெள்ளைத் திட்டுகளாய் ஆகாயத்தில் வலம் வருவதை நாம் தினமும் காண்கிறோம். இன்று கணினி உலகிலும் அது போன்று ஒரு மேகம் உருவாகி, உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து, கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதென்ன கணினி உலகில் மேகம்?
2007ஆம் ஆண்டிலிருந்து பல ஆய்விற்கு உட்பட்டு வரும் மேகக் கணிப்பு (கிளவுட் கம்பியூட்டிங்), தற்போது கணினியின் பயனை பல விதங்களில் மாற்றி அமைத்துள்ளது என்றே சொல்லலாம். பயனர்களுக்கு பற்பல வகையில் உதவுகின்றது.
கிளவுட்கம்பியூட்டிங்கின் ஒரு கூறே மேற்சொன்ன படங்களை இணையத்தில் ஏற்றுதலும் அதை உலகின் மற்றொரு பகுதியிலிருந்து காண்பதும்.
கிளவுட் கம்பியூட்டிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறதா? அதைப் பற்றி நாமும் சற்று தெரிந்து கொள்ளலாமா?
நம் மேசை கணினியில் மென்பொருளை ஓட்டிக் கொடுப்பதற்கு பதிலாக, அனைத்துமே இணையகத்தில் இருக்கும் மேகம் என்னும் பல தரப்பட்ட கணினிகளும், சேவையகங்களும் (servers) கூடிய கூட்டத்தில் இணையத்தின் வழியே ஓட்டிக் கொடுப்பதே இதன் முக்கிய அம்சம். அது உங்களது அனைத்து பயன்பாடுகளையும் (applications) ஆவணங்களையும் (documents) உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயன்படுத்த உதவும்.
இந்தப் புதிய உலகினை புரிந்து கொள்வது அத்தனைக் கடினமான காரியமல்ல. ஏனென்றால் நீங்கள் அதன் அம்சங்களை உங்கள் பணிகளில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
இன்று வரையிலும், மேசைக் கணினியில் நாம் மென்பொருளை நிறுவி, அதை ஓடச் செய்து, நம் தரவுகளை ஏற்றி, பிறகு தேவையான அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். இது தனித்துச் செயல்படும் முறை. நாம் உருவாக்கும் கோப்புகளும் ஆவணங்களும் இந்தக் கணினியிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அதை நிறுவனத்தின் வலையகத்தின் (Corporate Network [Intranet]) மூலம் மற்ற கணினிகள் அணுகிப் பெறுவதும் சாத்தியமே. இருந்த போதும், வலையகத்தின் வெளியே அவற்றை அணுக முடியாது. இது முழுக்க முழுக்க தனியார் மையமாக அமைக்கப்பட்டது.
ஆனால், பயன்படுத்தப்படும் மென்பொருளையே இணையத்தின் வழி கிளவுட் கம்பியூட்டிங் மூலம் பெறலாம். நம் கணினியில் நிறுவப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் நம் கணினி செயலிழந்து போனாலும் கூட, மென்பொருள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக, நாம் வேறு கணினியைக் கொண்டு, அதே மென்பொருளைப் பயன்படுத்தி நம் பணியினைச் செய்து விடலாம்.
அது போன்றே கோப்புகளும் ஆவணங்களும் கூட இணையத்தில் சேமிக்கப்பட்டு இருப்பதால், அவற்றையும் இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய எந்தக் கணினி கொண்டும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். அதைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், அனுமதி இருந்தால், அதன் உள்ளிருக்கும் விசயத்தை கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் செய்யலாம். அதனால் கிளவுட் கம்பியூட்டிங் தனியார் மையத்தை விட்டு, ஆவணத்தை மையமாகக் கொண்டுச் செயல்படுகிறது.
இது மிகவும் எளிய விளக்கம் மட்டுமே. இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோமா?
கிளவுட் கம்பியூட்டிங் என்பது கணினி வலையமைப்பு (Computer Network) வகை கணிமை அல்ல.
கணினி வலையமைப்பில் பயன்பாடுகளும், ஆவணங்களும் நிறுவனத்தாரின் மையச் சேவையகத்தில் (Central Server) பாதுகாக்கப்பட்டு, நிறுவன வலையகத்தின் (Corporate Network [Intranet]) மூலமாக, பயனர்கள் பயன்படுத்த வழி செய்யப்படுகிறது. பயனர்கள் பெரும்பாலும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கிளவுட் கம்பியூட்டிங் அதைவிடவும் மிகப் பெரியது. இது பற்பல நிறுவனங்கள், பற்பல சேவையகங்கள், பற்பல வலையகங்களைக் கொண்டது. மேலும், மேகத்தில் இருக்கும் அனைத்து விசயங்களையும், நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுகலாம். பயனர்கள் உலகில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அனுமதி பெற்று அணுக (access) வேண்டிய மென்பொருட்களும், ஆவணங்களும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அணுக முடியும் வகையில் பாதுகாப்புடன் இருக்கும்.
அதனால் மேலோட்டமாகக் காணும் போது, கணினி வலையமைப்பு போன்று தோன்றினாலும், கிளவுட் கம்பியூட்டிங் இவ்வகை தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டது.
அப்படியென்றால் உண்மையில் கிளவுட் கம்பியூட்டிங் என்பது என்ன?
உண்மை உரு, “கிளவுட்” (மேகம்) என்ற வார்த்தையில் தான் அடங்கியுள்ளது. மேகம் என்பது பல்லாயிரக்கணக்கான கணினிகள் இணைக்கப்பட்ட மிகப் பெரிய கணினிக் குழு. அதிலிருக்கும் கணினிகள் மிகச் சிறிய தனிநபர் கணினியாக இருக்கலாம் (Personal Cloud). அல்லது வலையகத்தில் (Network [Internet / Intranet]) இருக்கும் சேவையகமாக (Storage) இருக்கலாம். அவை தனியாராக (Private Cloud) இருக்கலாம். பொதுவாகவும் (Public Cloud) இருக்கலாம். அல்லது எல்லாம் கலந்த கலவையாகவும் (Hybrid Cloud) இருக்கலாம்.
இணையத்துடன் கணினி இணைந்தால் போதும். நாழும் மேகத்தின் ஒரு அங்கமாக மாறிவிடுவோம்.
கணினி உலகில் மேகம் என்பது பல விசயங்களை உள்ளடக்கியது. ஹார்ட்வேர், வலையகம் (network), சேமிப்புப்கலன் (storage), சேவைகள் (services) மற்றும் இடைமுகப்புகள் (interfaces) ஆகிய அனைத்தையும் இணைத்துக் தரும் சேவை தான் கிளவுட் கம்பியூட்டிங். வலையகத்தில் மென்பொருளைத் தருவது, வேண்டிய அனைத்துக் கட்டமைப்புகளை அமைப்பது, பாதுகாப்புப் பெட்டகத்தை உருவாக்கித் தருவது அனைத்தும் இதன் அங்கம். பயனர்களின் தேவைக்கேற்ப அனைத்தையும் தரவல்லது.
உதாரணமாக மிகவும் பிரபலமான கூகுள் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். நாம் கூகுள் தேடுயந்திரத்தின் மூலமாக பல தகவல்களைப் பெறுகிறோம். ஜி-மெயில் மூலமாக மின்னஞ்சல் அனுப்பலாம், பெறலாம். இது எப்படி சாத்தியமாகிறது. கூகுள் நிறுவனம் ஒரு பெரும் மேகத்தை நிறுவியிருப்பதன் விளைவே இவை. இது மிகச் சிறிய தனிநபர் கணினி முதல் பெரிய சேவையகம் வரை கொண்டது. அது தனியானது. கூகுளுக்குச் சொந்தமானது. ஆனால் பயனர்களுக்கு இது பொதுவானது. யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்தக் கணினி மேகமானது தனி நிறுவனத்திற்கும், குழுவினருக்கும் அப்பாற்பட்டது. பயன்பாட்டு மென்பொருளும், தரவுகளும் இந்த மேகக் கூட்டத்தில் இருக்கும் அனைத்துக் கணினிகளுக்கும் கிடைக்கும். அனுமதி பெற்றோர் அணுகிப் பார்க்கலாம். எந்த ஆவணத்தையும், மென்பொருளையும் பயன்படுத்தலாம். பயனர்களுக்கு அதன் கட்டமைப்பு, தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கூகுள் நிறுவனத்தார் இந்தக் கிளவுட் கம்பியூட்டிங் ஆறு முக்கியக் கூறுகளைக் கொண்டது என்று விளக்குவர்.
மேகம் பயனர் மையமானது. பயனராக மேகத்துடன் தொடர்பு கொண்டால், அதில் இருக்கும் ஆவணங்கள், தகவல்கள், படங்கள், பயன்பாட்டு மென்பொருட்கள் என்று எதுவானலும், அது பயனருடையதாகிவிடும். அவை சொந்தமானதாக இருக்கும் அதே நேரத்தில், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.
மேகம் பணி மையமானது. மென்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றைக் கொண்டு ஏற்படுத்தும் ஆவணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
மேகம் சக்தி வாய்ந்தது. தனி மேசை கணினி (Personal Computer) மூலமாக கிடைக்கும் சக்தியை விட, கணக்கிடமுடியாத சக்தியை எண்ணிலடங்கா கணினிகளின் கூட்டமைப்பில் கிடைக்கும் வாய்ப்பு இந்த மேக அமைப்பின் மூலம் கிடைக்கும்.
மேகம் எளிதில் அணுகத்தக்கது (accessible). தரவுகள் மேகத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் உடனுக்குடன் பற்பல சேவையகங்களிலிருந்து ஆவணங்களை அணுகிப் பெறலாம்.
மேகம் நுண்ணறிவு (intelligence) கொண்டது. அனைத்து விசயங்களும் மேகத்தில் இருப்பதால், பயனர்களுக்குப் பயன்படும் வகையில் தேவையானவற்றைத் தேடிக் கண்டெடுத்துக் கொடுக்க, மேகத்திற்கு நுண்ணறிவு தேவை.
மேகம் நிரலவல்லது (programmable). பல அத்தியாவசியமான பணிகளைச் செய்ய, மேகம் இயக்கப்பட வேண்டும். உதாரணமாக, தரவுகளைப் பத்திரமாகச் சேமிக்க, ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்கள், பல கணினிகளில் சேமிக்கப்பட வேண்டும். அதனால் ஒரு கணினி செயலிழந்து போனாலும், அதிலிருக்கும் தரவுகள் மற்றொரு கணினியிலிருந்து பெற்றுத் தர வேண்டியது மேகத்தின் கடமையாகிறது. அதற்கான மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். அதன் காரணமாக மேகம் நிரலவல்லது.
கிளவுட் கம்பியூட்டிங் பயன்பாட்டு களங்கள், மிகவும் பிரபலமான கூகுள் குடும்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கூகுள் டாக்ஸ் (Google Docs), கூகுள் ஸ்பிரெட்ஷீட் (Google Spreadsheet), கூகுள் காலேண்டர் (Google Calendar), கூகுள் போடோஸ் (Google Photos, previously Picasa) ஆகிய அனைத்து பயன்பாட்டு களங்களும் கூகுள் சேவையகத்தில் அமைந்துள்ளன. இணையத் தொடர்பு கிடைக்கும் எந்தப் பகுதியிலிருந்தும் பயனர்கள் இவற்றை அணுகிப் பயன்படுத்தலாம். இவை குழுப்பணிகள் (Team Collaboration) செய்யவும் பெரிதும் உதவுகின்றன.
கணினியிலிருந்து பயனர்களுக்கும், பயன்பாட்டு மென்பொருளிலிருந்து பணிகளுக்கும், தனித்துச் சேமிக்கப்பட்ட தரவிலிருந்து (Personal Data Storage [e.g. Hard Disk, Pen Drive]) எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகவல்ல தரவுகளுக்கும் (Cloud Data Storage [e.g. Google Drive, Dropbox]) இன்று கணிப்பு மாறியிருக்கிறது. அதுவே கிளவுட் கம்பியூட்டிங்.
நம்மிடம் சொந்தமாகக் கணினி இல்லாவிட்டாலும், இணைய மையத்திற்குச் சென்று, நமக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்கி, சேமித்து விடலாம். வேண்டிய போது, அதை அந்த இணைய மையத்திற்கேச் சென்றும் பெறலாம், அல்லது வேறோர் ஊரிலிருந்தும் அதே ஆவணங்களை அணுகியும் பெறலாம். அதே வகையில் நாம் இணையத்தில் ஏற்றும் படங்கள் அனைத்தையும், உலகில் எந்த மூலையிலிருந்தாலும் நம் உறவினர்களால் காண முடியும். அதுவே கிளவுட் கம்பியூட்டிங்கின் மகிமை.
தொடரும் (1)......! 🙂

Friday, October 23, 2015

முறைமை

உள்ளீடாக தரவுகளை கொடுத்து, முறைவழிப்படுத்த வெளியீடாக தகவல்களை தருவது முறைமை எனலாம்.

Tuesday, January 28, 2014